search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி டெண்டர் முறைகேடு"

    மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #MinisterVelumani
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு மட்டும் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரூ. 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் குறிப்பிட்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்.

    அதேபோல சென்னை மாநகராட்சியில், ரூ. 20 கோடி வருமானம் ஈட்டிய நிறுவனங்களே மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்த பணியில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.


    உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, இந்த ஒப்பந்த பணிகள் வழங்குவதில் பெரும் தொகை ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

    எனவே, அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஐகோர்ட்டு உருவாக்கவேண்டும்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தமிழக தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MinisterSPVelumani #HighCourt
    ×